7. பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
8. நன்று செய்வதற் குடன்படு வாயேல்
நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
அன்று முன்னரே கடந்தனர் அன்றி
அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
9. அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
முன்றில் காத்தனை அவ்வள வேனும்
முயன்று காத்திலை முன்னவன் கோயில்
துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.