திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருக்காட்சிக் கிரங்கல்
tirukkāṭsik kiraṅkal
எண்ணத் திரங்கல்
eṇṇat tiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

062. திரு அருட் கிரங்கல்
tiru aruṭ kiraṅkal

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
    அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
    தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
    இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
  • 2. எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
    பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
    செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ
    அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
  • 3. பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
    குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
    மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
    பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
  • 4. எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
    தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
    சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
    நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
  • 5. உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
    கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
    நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
    எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
  • 6. கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
    தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
    தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
    பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
  • 7. முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
    தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
    சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
    எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
  • 8. வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
    கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
    நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
    தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
  • 9. சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
    நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
    தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
    வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
  • 10. கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
    எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
    உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
    மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.

திரு அருட் கிரங்கல் // திரு அருட் கிரங்கல்

No audios found!