1. வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்
கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
2. கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
3. ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
4. உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
5. ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
6. மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
7. வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
8. ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
9. துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
10. முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.