Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
சோதிடம் நாடல்
sōtiṭam nāṭal
காதற் சிறப்புக் கதுவா மாண்பு
kātaṟ siṟappuk katuvā māṇpu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai
016. திருஅருட் பெருமிதம்
tiruaruṭ perumitam
செவிலி கழறல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
2.
கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
3.
மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
4.
நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
5.
திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
6.
மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
7.
மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
8.
விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
9.
நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
10.
உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
திருஅருட் பெருமிதம் // திருஅருட் பெருமிதம்
No audios found!
Oct,12/2014: please check back again.