24. தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
41. சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
42. அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
45. பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
47. கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
காணாமற் காண்கின்ற காட்சியே உள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
51. மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
66. மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
67. பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
68. அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
69. என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
94. தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.