Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
போற்றித் திருப்பதிகம்
pōṟṟit tiruppatikam
தரிசனப் பதிகம்
tarisaṉap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
080. விண்ணப்பப் பதிகம்
viṇṇappap patikam
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
2.
இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.
3.
மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
4.
தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
5.
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
6.
கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
7.
இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
8.
உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
9.
எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
10.
இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
திருவாரூர்ப் பதிகம் // விண்ணப்பப் பதிகம்
2460-010-3-Thiruvaaroorp Padhikam.mp3
Download