திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருமுகப் பாசுரம்
tirumukap pāsuram
தெய்வத் தனித் திருமாலை
teyvat taṉit tirumālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

074. சிங்கபுரிக் கந்தர் பதிகம்
siṅkapurik kantar patikam

    காப்பு
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
    நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
    மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
    பொய்யகலப் போற்றுவம்இப் போது.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 2. சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
    ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
    வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
    தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 3. உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
    தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
    நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
    திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 4. பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
    வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
    கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
    செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 5. பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
    புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
    தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
    தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 6. தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
    மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
    தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
    தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 7. வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
    மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
    தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
    தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 8. மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
    நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
    ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
    தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 9. முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
    புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
    என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
    தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 10. விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
    கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
    மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
    திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 11. மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
    ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
    நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
    தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

    • * இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது." * 6 - 5 - 1864 - ஆ. பா.

சிங்கபுரிக் கந்தர் பதிகம் // சிங்கபுரிக் கந்தர் பதிகம்