திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தரிசனப் பதிகம்
tarisaṉap patikam
கலி விண்ணப்பம்
kali viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

082. அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
    இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
    கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
    திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே.
  • 2. அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
    இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
    குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
    நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே.
  • 3. நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
    தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
    வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
    பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
  • 4. பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
    போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
    வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
    ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
  • 5. உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
    நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
    விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
    திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
  • 6. செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
    வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
    உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
    நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
  • 7. எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்
    நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே
    கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
    பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே.
  • 8. பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
    புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
    திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
    எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே.
  • 9. என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
    பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
    புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
    வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.
  • 10. வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
    பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
    ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
    ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.
  • 11. எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
    களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
    அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
    தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே.
  • 12. சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
    எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
    அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
    பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
  • 13. காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்
    பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ
    வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்
    தூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.
  • 14. சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
    வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
    தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
    வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
  • 15. வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
    பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
    நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
    அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே.
  • 16. அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
    கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
    செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
    பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.
  • 17. புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
    நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
    மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
    கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே.
  • 18. கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
    மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
    தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
    அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே.
  • 19. அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
    படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
    விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
    கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே.
  • 20. குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
    நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
    பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
    என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.
  • 21. என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
    தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
    இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
    நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே.
  • 22. நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
    வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
    தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
    முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.

அபராத விண்ணப்பம் // அபராத விண்ணப்பம்

No audios found!