179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.