திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வேட்கைக் கொத்து
vēṭkaik kottu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

113. தலைமகளின் முன்ன முடிபு
talaimakaḷiṉ muṉṉa muṭipu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
    விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
    கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
    கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
    மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
    மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
    செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
    சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
  • 2. மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
    மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
    தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
    துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
    பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
    பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
    வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
    மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
  • 3. முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
    முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
    என்னவனே என்துணையே என்உறவே என்னை
    ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
    மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
    மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
    அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
    ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
  • 4. சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
    தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
    புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
    பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
    இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
    எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
    கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
    கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
  • 5. ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
    உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
    வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
    மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
    கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
    குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
    நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
    நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
  • 6. என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
    என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
    பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
    பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
    அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
    அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
    மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
    மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
  • 7. எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
    என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
    மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
    மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
    கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
    கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
    குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
    கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
  • 8. மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
    மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
    தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
    சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
    சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
    சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
    இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
    ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
  • 9. நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
    நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
    மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
    வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
    தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
    சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
    தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
    தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
  • 10. குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
    குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
    சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
    சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
    பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
    பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
    இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
    என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.

தலைமகளின் முன்ன முடிபு // தலைமகளின் முன்ன முடிபு

No audios found!