4. போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
5. வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
8. விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
9. பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
10. அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.