திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வாதனைக் கழிவு
vātaṉaik kaḻivu
தற்போத இழப்பு
taṟpōta iḻappu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

025. அனுபோக நிலயம்
aṉupōka nilayam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
    எண்ணினும் ஐயவோ மயங்கிப்
    பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
    பரதவிப் பதைஅறிந் திலையோ
    தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
    தனிநடம் புரிதனித் தலைவா
    கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
    கலந்தருள் கலந்தருள் எனையே.
  • 2. பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
    பேசினும் நெய்விடுந் தீப்போல்
    எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
    எங்கணும் கண்ணுடை எந்தாய்
    புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
    புண்ணியா என்னுயிர்த் துணைவா
    கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
    கலந்தருள் கலந்தருள் எனையே.
  • 3. மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
    மெய்யனே ஐயனே எனக்கு
    மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
    வல்லனே நல்லனே அருட்செங்
    கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
    குணத்தனே இனிச்சகிப் பறியேன்
    காலையே தருதற் கிதுதகு தருணம்
    கலந்தருள் கலந்தருள் எனையே.
  • 4. பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
    பண்பனே திருச்சிற்றம் பலத்தே
    தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
    தூயனே நேயனே பிரமன்
    விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
    விளங்குறக் காட்டிய விமலா
    கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
    கலந்தருள் கலந்தருள் எனையே.
  • 5. தனித்துணை எனும்என் தந்தையே தாயே
    தலைவனே சிற்சபை தனிலே
    இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
    என்னிரு கண்ணுள்மா மணியே
    அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
    அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
    கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
    கலந்தருள் கலந்தருள் எனையே.
  • 6. துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
    சோதியுட் சோதியே அழியா
    இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
    ஈன்றநல் தந்தையே தாயே
    அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
    அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
    பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
    புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
  • 7. ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
    தென்னைஆட் கொண்டெனை உவந்தே
    ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
    ஒருவனே என்னுயிர்த் துணைவா
    வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
    விளங்கிய விமலனே ஞான
    போதகம் தருதற் கிதுதகு தருணம்
    புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
  • 8. எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
    திசைந்தபே ரின்பமே யான்தான்
    பண்ணிய தவமே தவத்துறும் பலனே
    பலத்தினால் கிடைத்தஎன் பதியே
    தண்ணிய மதியே மதிமுடி அரசே
    தனித்தசிற் சபைநடத் தமுதே
    புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
    புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
  • 9. மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
    மந்திர மேஒளிர் மணியே
    நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
    நேயனே தாயனை யவனே
    பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
    பரமனே பரமசிற் சுகந்தான்
    புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
    புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
  • 10. களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
    கற்பகத் தீஞ்சுவைக் கனியே
    வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
    விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
    ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
    ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
    புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
    புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

    • 255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
    • 256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.

அனுபோக நிலயம் // அனுபோக நிலயம்

No audios found!