திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அம்பலவாணர் வருகை
ampalavāṇar varukai
அம்பலவாணர் ஆடவருகை
ampalavāṇar āṭavarukai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

114. அம்பலவாணர் அணையவருகை
ampalavāṇar aṇaiyavarukai

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
    அணிவளர்311 சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
  • கண்ணிகள்
  • 2. இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
    இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
    இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
    இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 3. உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
    உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
    கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
    கண்ணனைய காதலரே அணையவா ரீர்
    அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
    அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
    இலகுசபா பதியவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 4. பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
    பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
    மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
    மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
    விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
    மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
    இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 5. வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
    வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
    அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
    அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
    புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
    பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
    எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 6. சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
    சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
    உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
    உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
    பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
    பொய்யாத வாசகரே அணையவா ரீர்
    இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 7. சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
    தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
    ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
    ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
    ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
    உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
    ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 8. அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
    அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
    துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
    துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
    பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
    பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
    என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 9. அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
    ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
    புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
    பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
    வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
    மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
    இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 10. கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
    கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
    அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
    அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
    தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
    சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
    இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 11. சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
    திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
    ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
    அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
    ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
    என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
    ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
  • 12. கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
    காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
    புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
    புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
    அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
    அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
    இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
    என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
  • 13. அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
    அணிவளர்312 சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.

    • 311. அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
    • 312. அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

அம்பலவாணர் அணையவருகை // அம்பலவாணர் அணையவருகை