திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பொதுநடம்
potunaṭam
அருள் ஆரமுதப் பேறு
aruḷ āramutap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

053. திருவருட் பெருமை
tiruvaruṭ perumai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அன்பனே அப்பா அம்மையே அரசே
    அருட்பெருஞ் சோதியே அடியேன்
    துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
    சுகத்திலே தோற்றிய சுகமே
    இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
    என்னுளே இலங்கிய பொருளே
    வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 2. பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
    பெருக்கமே என்பெரும் பேறே
    உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
    உண்மைவான் அமுதமே என்பால்
    கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
    கருணையங் கடவுளே விரைந்து
    வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 3. எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
    என்னிரு கண்ணினுள் மணியே
    இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
    இணையிலா என்னுடை அன்பே
    சொந்தநல் உறவே அம்பலத் தரசே
    சோதியே சோதியே விரைந்து
    வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 4. கோஎன எனது குருஎன ஞான
    குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
    பூஎன அதிலே மணம்என வணத்தின்
    பொலிவென வயங்கிய பொற்பே
    தேவெனத் தேவ தேவென ஒருமைச்
    சிவம்என விளங்கிய பதியே
    வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 5. உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
    ஒருவனே உலகெலாம் அறியத்
    தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
    சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
    கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
    கடவுளே கனகஅம் பலத்தென்
    வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 6. நல்லவா அளித்த நல்லவா எனையும்
    நயந்தவா நாயினேன் நவின்ற
    சொல்லவா எனக்குத் துணையவா ஞான
    சுகத்தவா சோதிஅம் பலவா
    அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
    ஆண்டவா தாண்டவா எல்லாம்
    வல்லவா என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 7. திண்மையே முதலைங் குணக்கரு வாய
    செல்வமே நல்வழி காட்டும்
    கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
    கண்ணுற இயைந்தநற் கருத்தே
    உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
    ஒருதனித் தெய்வமே உலவா
    வண்மையே என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 8. காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
    கற்பகத் தனிப்பெருந் தருவே
    தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
    சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
    சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
    சித்தியே சுத்தசன் மார்க்க
    வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 9. என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
    ஈன்றவா என்னவா வேதம்
    சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
    துதியவா அம்பலத் தமுதம்
    அன்னவா அறிவால் அறியரி வறிவா
    ஆனந்த நாடகம் புரியும்
    மன்னவா என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.
  • 10. விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
    விளக்கினால் என்னுளம் விளக்கி
    இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
    கென்கருத் தனைத்தையும் புரிந்தே
    சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
    சத்தியைத் தயவினால் தருக
    வரதனே என்றேன் வந்தருட் சோதி
    வழங்கினை வாழிநின் மாண்பே.

    • 322. அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க.

திருவருட் பெருமை // திருவருட் பெருமை

No audios found!