திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தோழிக் குரிமை கிளத்தல்
tōḻik kurimai kiḷattal
அடிமைப் பேறு
aṭimaip pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

082. அருட்பெருஞ்சோதி அடைவு
aruṭperuñsōti aṭaivu

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
    அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
    அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
    அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
  • 2. ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
    சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
    சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
    நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
  • 3. உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
    வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
    குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
    மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
  • 4. மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
    சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
    இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
    கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
  • 5. கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
    கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
    தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
    உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
  • 6. உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
    நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
    இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
    மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
  • 7. மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
    இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
    பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
    சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
  • 8. சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
    விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
    றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
    இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
  • 9. தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
    சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
    நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
    இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
  • 10. நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
    மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
    குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
    தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
  • 11. நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
    பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
    கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
    மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
  • 12. வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
    ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
    டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
    வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
  • 13. மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
    உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
    தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
    துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.

அருட்பெருஞ்சோதி அடைவு // அருட்பெருஞ்சோதி அடைவு

No audios found!