Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திரு உந்தியார்
tiru untiyār
பற்றறுத்தல்
paṟṟaṟuttal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
065. அடைக்கலம் புகுதல்
aṭaikkalam pukutal
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
2.
திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
3.
தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
4.
கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
5.
இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
6.
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
7.
பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
8.
கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
9.
புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
10.
பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
11.
இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
அடைக்கலம் புகுதல் // அடைக்கலம் புகுதல்
No audios found!
Oct,12/2014: please check back again.