Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவருட் கொடை
tiruvaruṭ koṭai
அனுபவ சித்தி
aṉupava sitti
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
090. உற்ற துரைத்தல்
uṟṟa turaittal
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
2.
அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
3.
அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
4.
கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
5.
ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.
6.
விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
7.
தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
8.
நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
9.
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
10.
பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
உற்ற துரைத்தல் // உற்ற துரைத்தல்
No audios found!
Oct,12/2014: please check back again.