Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)
ñāṉasariyai (vāypaṟai ārttal)
உலகப்பேறு
ulakappēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
108. சமாதி வற்புறுத்தல்
samāti vaṟpuṟuttal
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
தருணம்இதே அறிமின் என்றே
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
கின்றார்இம் மனிதர்அந்தோ
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
உளங்கலந்த தலைவா இங்கே
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
2.
இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
தருணம்இதே என்று வாய்மை
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
வார்த்தைகள்என் றறைகின் றாரால்
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
மனிதர்மதித் திறமை என்னே.
3.
சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்
கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
துண்மையினில் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும்அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.
4.
தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
உலகாளச் சூழ்ந்த காமப்
பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
நும்முயிரைப் பிடிக்க நாளைச்
சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
ஞானசபைத் தலைவன் உம்மைக்
கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
இவ்வுலகில் குலாவு வீரே.
5.
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
ஏன்பிறந்து திரிகின் றீரே.
6.
அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்டே
எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
எருவுக்கும் இயலா தன்றே.
7.
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
கஞ்சுவரே இழுதை யீரே.
8.
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
துடியாதென் சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
9.
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
கண்கெட்ட மாட்டி னீரே.
10.
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
கருங்கடலில் போக விட்டீர்
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
புரிகுவதித் தருணம் தானே.
சமாதி வற்புறுத்தல் // சமாதி வற்புறுத்தல்
No audios found!
Oct,12/2014: please check back again.