திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பத நம்புறு
pata nampuṟu
சத்திய வார்த்தை
sattiya vārttai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

147. அனுபவ மாலை
aṉupava mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
    அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
    எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
    என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
    வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
    மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
    நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
    நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
  • 2. கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
    கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
    எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
    இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
    மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
    மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
    பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
    பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
  • 3. எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
    நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
    நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
    பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
    பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
    வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
    வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
  • 4. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
    எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
    எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
    பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
    பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
    விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
    விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
  • 5. வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
    மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
    எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
    எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
    அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
    ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
    பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
    பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
  • 6. அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
    அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
    உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
    ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
    இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
    இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
    கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
    களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
  • 7. பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
    புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
    இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
    எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
    சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
    சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
    துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
    தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
  • 8. கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
    கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
    எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
    இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
    விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
    வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
    உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
    துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
  • 9. மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
    மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
    ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
    என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
    தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
    தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
    ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
    தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
  • 10. கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
    கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
    இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
    இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
    பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
    புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
    நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
    நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
  • 11. மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
    மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
    என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
    என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
    மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
    விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
    அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
    அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
  • 12. கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
    கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
    எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
    என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
    உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
    உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
    அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
    அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
  • 13. காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
    கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
    ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
    இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
    பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
    பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
    பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
    பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
  • 14. கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
    கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
    எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
    தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
    பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
    பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
    உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
    உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
  • 15. கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
    கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
    எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
    இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
    பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
    பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
    இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
    எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
  • 16. மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
    மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
    தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
    சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
    தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
    திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
    உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
    துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
  • 17. தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
    சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
    வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
    மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
    சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
    துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
    ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
    கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
  • 18. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
    தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
    இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
    இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
    மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
    மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
    தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
    தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
  • 19. மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
    மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
    குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
    குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
    தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
    சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
    அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
    அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
  • 20. அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
    ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
    விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
    விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
    கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
    கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
    இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
    இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
  • 21. பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
    பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
    அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
    அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
    கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
    களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
    புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
    புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
  • 22. மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
    மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
    நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
    நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
    இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
    எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
    இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
    என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
  • 23. கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
    குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
    நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
    நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
    ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
    ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
    ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
    என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
  • 24. அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
    ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
    தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
    திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
    இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
    என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
    மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
    மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
  • 25. என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
    என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
    பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
    புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
    அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
    அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
    மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
    மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
  • 26. தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
    தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
    சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
    திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
    அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
    அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
    எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
    வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
  • 27. எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
    இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
    நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
    நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
    இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
    என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
    செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
    சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
  • 28. வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
    மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
    நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
    நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
    கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
    கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
    தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
    தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
  • 29. என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
    எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
    பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
    புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
    புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
    புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
    உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
    உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
  • 30. ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
    என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
    ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
    உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
    தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
    செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
    ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
    இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
  • 31. ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
    அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
    மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
    வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
    கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
    கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
    வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
    மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
  • 32. தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
    தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
    பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
    புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
    என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
    இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
    முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
    முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
  • 33. இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
    என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
    அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
    அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
    எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
    இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
    நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
    நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
  • 34. திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
    சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
    உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
    ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
    பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
    பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
    துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
    சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
  • 35. அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
    ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
    தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
    திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
    மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
    மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
    இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
    என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
  • 36. செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
    தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
    பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
    படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
    எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
    என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
    தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
    சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
  • 37. தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
    தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
    மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
    முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
    யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
    கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
    ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
    அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
  • 38. திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
    திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
    அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
    அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
    பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
    பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
    உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
    ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
  • 39. வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
    விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
    தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
    தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
    இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
    இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
    பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
    புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
  • 40. கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
    கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
    பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
    படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
    அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
    அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
    என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
    என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
  • 41. என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
    இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
    பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
    பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
    உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
    உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
    மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
    மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
  • 42. பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
    பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
    சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
    திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
    ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
    ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
    ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
    உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
  • 43. நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
    நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
    போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
    புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
    வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
    விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
    வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
    மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
  • 44. புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
    பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
    எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
    இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
    பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
    பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
    அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
    ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
  • 45. கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
    ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
    திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
    பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
    பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
    வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
    வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
  • 46. குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
    புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
    புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
    அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
    அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
    விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
    மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
  • 47. கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
    படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
    பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
    அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
    ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
    கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
    கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
  • 48. இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
    எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
    அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
    அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
    என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
    என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
    துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
    சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
  • 49. துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
    சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
    பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
    பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
    இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
    என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
    உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
    ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
  • 50. ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
    எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
    ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
    என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
    ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
    அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
    கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
    கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.
  • 51. அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
    ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
    முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
    முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
    விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
    வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
    பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
    பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
  • 52. தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
    சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
    வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
    மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
    ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
    ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
    கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
    கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
  • 53. துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
    சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
    பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
    பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
    இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
    எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
    படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
    பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
  • 54. ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
    என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
    காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
    கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
    தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
    தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
    மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
    வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
  • 55. நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
    நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
    இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
    எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
    திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
    திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
    கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
    கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
  • 56. பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
    பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
    மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
    விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
    கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
    களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
    மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
    மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
  • 57. பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
    பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
    திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
    தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
    வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
    வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
    கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
    கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
  • 58. தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
    சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
    இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
    இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
    எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
    என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
    சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
    சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
  • 59. ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
    அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
    மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
    மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
    மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
    விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
    கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
    கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
  • 60. காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
    கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
    கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
    குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
    ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
    அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
    தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
    தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
  • 61. காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
    கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
    ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
    அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
    தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
    தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
    தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
    திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
  • 62. மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
    மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
    மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
    வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
    போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
    புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
    ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
    ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
  • 63. உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
    உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
    பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
    பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
    திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
    தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
    வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
    மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
  • 64. பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
    பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
    ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
    எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
    சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
    திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
    பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
    பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
  • 65. என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
    இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
    அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
    ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
    இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
    இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
    தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
    தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
  • 66. தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
    துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
    ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
    ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
    என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
    ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
  • 67. ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
    ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
    வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
    விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
    தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
    சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
    உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
  • 68. மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
    வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
    துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
    துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
    இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
    இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
    ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
  • 69. வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
    வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
    சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
    தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
    பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
    புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
    உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
  • 70. காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
    கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
    வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
    விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
    சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
    ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
  • 71. விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
    வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
    ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
    ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
    திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
    உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
  • 72. மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
    வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
    காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
    கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
    ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
    உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
    சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
  • 73. இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
    இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
    கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
    கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
    துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
    சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
    உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
    உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
  • 74. என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
    எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
    தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
    தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
    பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
    பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
    மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
    மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
  • 75. நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
    நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
    வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
    வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
    தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
    திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
    தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
    சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
  • 76. இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
    எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
    எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
    எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
    கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
    கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
    செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
    சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
  • 77. பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
    பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
    அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
    ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
    இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
    இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
    துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
    தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
  • 78. அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
    அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
    இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
    எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
    தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
    செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
    அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
    அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
  • 79. அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
    ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
    இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
    யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
    செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
    தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
    பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
    படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
  • 80. நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
    நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
    நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
    நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
    ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
    கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
    பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
    பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
  • 81. தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
    துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
    அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
    அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
    கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
    குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
    எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
    இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.
  • 82. நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
    நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
    வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
    மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
    தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
    தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
    ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
    ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
  • 83. வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
    வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
    தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
    தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
    தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
    திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
    யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
    என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
  • 84. என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
    இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
    நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
    நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
    புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
    பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
    வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
    மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
  • 85. உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
    உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
    துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
    சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
    பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
    பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
    அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
    ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
  • 86. மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
    மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
    சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
    சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
    பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
    பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
    சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
    தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
  • 87. எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
    இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
    கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
    கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
    நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
    ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
    செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
  • 88. பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
    பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
    அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
    யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
    பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
    பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
    துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
    சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
  • 89. சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
    சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
    பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
    பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
    அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
    அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
    சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
    திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
  • 90. எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
    இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
    மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
    விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
    இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
    இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
    பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
    பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
  • 91. காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
    கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
    கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
    குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
    நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
    நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
    மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
    வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
  • 92. சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
    சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
    ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
    அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
    ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
    உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
    சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
    சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
  • 93. சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
    தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
    உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
    ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
    அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
    ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
    பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
    பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
  • 94. நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
    நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
    ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
    உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
    வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
    மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
    தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
    சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
  • 95. துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
    சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
    குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
    குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
    குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
    கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
    மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
    வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
  • 96. தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
    தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
    கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
    கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
    செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
    சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
    இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
    இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
  • 97. அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
    அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
    இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
    எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
    மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
    மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
    தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
    திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
  • 98. புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
    புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
    சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
    செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
    பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
    பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
    மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
    மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
  • 99. தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
    தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
    வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
    மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
    ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
    அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
    தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
    சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
  • 100. அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
    ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
    செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
    திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
    பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
    பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
    அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
    அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.

    • 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
    • 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
    • 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
    • 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
    • 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    • 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.

அனுபவ மாலை // அனுபவ மாலை