Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
சத்திய வார்த்தை
sattiya vārttai
ஜோதி ஜோதி
jōti jōti
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
149. சத்திய அறிவிப்பு
sattiya aṟivippu
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
2.
தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
3.
சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
4.
என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
374. இத்திருப்பாட்டின் கீழ் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகளால்எழுதப்பெற்றுள்ளது.
375. இத்திருப்பாட்டின் கீழ் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்"என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.
சத்திய அறிவிப்பு // சத்திய அறிவிப்பு
No audios found!
Oct,12/2014: please check back again.