Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவருள் வேட்கை
tiruvaruḷ vēṭkai
அறிவரும் பெருமை
aṟivarum perumai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
017. அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
2.
உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
3.
கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
4.
வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
வேடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
நீடயில் படைசேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.
5.
நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.
6.
அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
7.
நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.
8.
சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.
9.
துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
10.
கட்டினேன் பாபக் கொடுஞ்சுமை எடுப்பேன் கடும்பிழை கருதிடேல் நின்னை
விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
சுட்டிலாப் பொருளே சுகப்பெருங் கடலே தூய்த்திரு ஒற்றியூர்த் துணையே
தட்டிலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்தருள் தருந்தயா நிதியே.
அபராத விண்ணப்பம் // அபராத விண்ணப்பம்
No audios found!
Oct,12/2014: please check back again.