Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவிண்ணப்பம்
tiruviṇṇappam
வழிமொழி விண்ணப்பம்
vaḻimoḻi viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
047. பிரசாத விண்ணப்பம்
pirasāta viṇṇappam
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் பதகனேன் படிற்றுரு வகனேன்
வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத்தொழல் மறந்து
நசைஇலா மலம்உண் டோடுறும் கொடிய நாய்என உணவுகொண் டுற்றேன்
தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
2.
அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் அப்பநின் அடியினை காணா
தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி என்னஉண் டுற்றனன் அதனால்
புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே பூதநா யகஎன்றன் உடலம்
தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
3.
கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்துபாழ் வயிற்றை
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி மலம்பெற வந்தனன் அதனால்
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே இறைவனே நீஅமர்ந் தருளும்
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
4.
நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
5.
குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
6.
கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
7.
அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
8.
கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
9.
கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர்
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல்
சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
10.
முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல்
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால்
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
பிரசாத விண்ணப்பம் // பிரசாத விண்ணப்பம்
No audios found!
Oct,12/2014: please check back again.