திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவண்ண விண்ணப்பம்
tiruvaṇṇa viṇṇappam
கொடைமட விண்ணப்பம்
koṭaimaṭa viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

057. மருட்கை விண்ணப்பம்
maruṭkai viṇṇappam

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. யாது செய்குவன் போதுபோ கின்ற
    தண்ண லேஉம தன்பருக் கடியேன்
    கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
    கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
    வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
    வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
    மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 2. எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
    என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
    கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
    கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
    தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
    தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
    மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 3. எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
    திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
    தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
    சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
    வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
    வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
    மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 4. என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
    என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
    முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
    மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
    அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
    அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
    வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 5. காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
    கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
    சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
    சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
    ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
    இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
    வாம மாதராள் மருவொற்றி உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 6. இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
    என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
    துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
    சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
    அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
    அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
    வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 7. ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
    உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
    தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
    தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
    பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
    பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
    வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 8. இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
    எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
    மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
    வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
    குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
    குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
    வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 9. சஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்
    சலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே
    அஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை
    அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன்
    துஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ
    துணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர்
    மஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
  • 10. அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
    காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
    சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
    துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
    அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
    அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
    மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
    வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

மருட்கை விண்ணப்பம் // மருட்கை விண்ணப்பம்

No audios found!