Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
பெரு விண்ணப்பம்
peru viṇṇappam
திரு அருட் கிரங்கல்
tiru aruṭ kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
061. திருக்காட்சிக் கிரங்கல்
tirukkāṭsik kiraṅkal
திருவொற்றியூர்
தரவு கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
1.
மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
2.
மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
3.
வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
4.
நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்
தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்
தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
5.
வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
6.
நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
7.
தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
அவ்வண்ண மான அரசே அமுதேநின்
செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
8.
அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
9.
பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
10.
நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
திருக்காட்சிக் கிரங்கல் // திருக்காட்சிக் கிரங்கல்
No audios found!
Oct,12/2014: please check back again.