திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இரங்கன் மாலை
iraṅkaṉ mālai
சல்லாப வியன்மொழி
sallāpa viyaṉmoḻi
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

004. திரு உலா வியப்பு
tiru ulā viyappu

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
    உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
    வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
    விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
  • 2. அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
    உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
    வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
    மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
  • 3. பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
    தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
    இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
    முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
  • 4. காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
    ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
    மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
    நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
  • 5. செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
    கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
    எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
    அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
  • 6. சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
    சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
    பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
    மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
  • 7. பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
    மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
    நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
    மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
  • 8. கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
    பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
    தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
    நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
  • 9. ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
    சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
    வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
    காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
  • 10. சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
    சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
    நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
    சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.

திரு உலா வியப்பு // திரு உலா வியப்பு

No audios found!