திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வியப்பு மொழி
viyappu moḻi
குறி ஆராய்ச்சி
kuṟi ārāychsi
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

010. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
puṇarā viraku poruntuṟu vēṭkaiyiṉ iraṅkal

  திருவொற்றியூர்
  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
  வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
  எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
  தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 2. மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
  பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே
  கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
  சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 3. பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
  ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
  வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
  செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 4. நந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும்
  சந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
  அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும்
  சிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 5. என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
  பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
  ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
  தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 6. மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
  காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
  பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
  சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 7. வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
  இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
  புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
  தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 8. எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
  தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
  மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
  தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 9. காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
  சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
  மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
  சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 10. உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
  அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
  கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
  திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 11. மாலும் அறியான் அயன்அறியான் மறையும் அறியா வானவர்எக்
  காலும் அறியார் ஒற்றிநிற்குங் கள்வர் அவரைக் கண்டிலனே
  கோலும் மகளிர் அலர்ஒன்றோ கோடா கோடி என்பதல்லால்
  சேலுண் விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 12. உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
  இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
  சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
  சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 13. ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
  ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
  வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
  தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 14. தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
  அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே
  பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
  செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 15. பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
  கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
  தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
  தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 16. உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
  செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
  வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
  செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 17. ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
  கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
  மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
  தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 18. மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு
  கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே
  சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
  திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 19. பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
  உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
  அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
  திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 20. பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
  தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே
  துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ
  திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 21. வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை
  உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே
  கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
  செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 22. உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
  கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
  குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
  திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 23. வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
  நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
  ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
  தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 24. தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
  வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
  கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
  திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 25. பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
  உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
  எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
  செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 26. போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
  யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
  சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
  தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 27. தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
  ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
  காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
  சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 28. ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
  ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
  வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
  சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 29. காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
  ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
  சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்
  சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 • 30. சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
  செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
  மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
  திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.

புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல் // புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

No audios found!