Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
போக் குரையீடு
pōk kuraiyīṭu
நெஞ்சொடு புலத்தல்
neñsoṭu pulattal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
018. பணித்திறம் வேட்டல்
paṇittiṟam vēṭṭal
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
உண்ணேனோ ஆனந்தக் கண்ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
2.
பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே.
3.
வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
4.
கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
5.
தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
6.
இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
7.
சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
8.
முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
9.
கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.
10.
தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
பணித்திறம் வேட்டல் // பணித்திறம் வேட்டல்
[5-18, 0231]PDI--NaNNeenoo Makizvinotum.mp3
Download
5-018-0231-Paniththiram_Vayttal.mp3
Download