திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மகாதேவ மாலை
makātēva mālai
வடிவுடை மாணிக்க மாலை
vaṭivuṭai māṇikka mālai
முதல் திருமுறை / First Thirumurai

006. திருவருண் முறையீடு
tiruvaruṇ muṟaiyīṭu

  கட்டளைக் கலித்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
  இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
  அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
  சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
 • 2. என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
  இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
  மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
  பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.
 • 3. தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
  கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
  துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
  அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே.
 • 4. பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
  ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
  பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
  செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே.
 • 5. விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத்
  திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின்
  நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர்
  இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே.
 • 6. விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
  கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
  பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
  பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.
 • 7. விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
  சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
  படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
  நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.
 • 8. கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
  தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
  வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
  ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
 • 9. நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
  தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
  கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
  ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.
 • 10. பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
  ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
  கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
  மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.
 • 11. தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
  தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
  நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
  வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
 • 12. வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
  என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
  நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
  டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
 • 13. கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
  பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
  வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
  துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.
 • 14. வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
  காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
  பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
  நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே.
 • 15. நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
  தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
  ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
  கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.
 • 16. மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
  பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
  தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
  நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
 • 17. அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
  நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
  துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ
  என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே.
 • 18. என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
  பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
  துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
  முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
 • 19. பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
  கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
  பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
  மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
 • 20. சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
  பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
  தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
  போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
 • 21. அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
  கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
  மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
  தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
 • 22. அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
  பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
  வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
  தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
 • 23. சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
  துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
  குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
  இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
 • 24. கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
  ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
  வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
  வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
 • 25. சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
  போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
  வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
  காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
 • 26. வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
  தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
  ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
  நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
 • 27. அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
  எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
  தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
  கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே.
 • 28. நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
  கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
  தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
  பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
 • 29. தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
  வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
  ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
  நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
 • 30. நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
  குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
  திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
  படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.
 • 31. ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
  போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
  கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
  நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
 • 32. சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
  வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
  பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
  பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
 • 33. நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
  தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
  நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
  சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
 • 34. தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
  மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
  வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
  இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.
 • 35. பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
  அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
  கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
  மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
 • 36. நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
  குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
  முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
  வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
 • 37. மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
  பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
  எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
  விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
 • 38. கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
  சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
  அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
  நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
 • 39. ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
  வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
  சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
  போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
 • 40. பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
  நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
  மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
  குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
 • 41. நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
  திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
  விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
  இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
 • 42. விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
  மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
  குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
  பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
 • 43. சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
  பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
  கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
  மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
 • 44. ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
  வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
  கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
  திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
 • 45. முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
  அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
  கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
  என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
 • 46. வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
  மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
  ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
  ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
 • 47. நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
  நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
  பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
  தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.
 • 48. உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
  தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
  பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
  அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
 • 49. மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
  தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
  ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
  நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே.
 • 50. வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
  சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
  முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
  மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.
 • 51. சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
  கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
  அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
  நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
 • 52. வருஞ்செல்லுள்148 நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
  பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
  தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
  அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.
 • 53. கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
  திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
  ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
  உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
 • 54. மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
  திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
  விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
  கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.
 • 55. பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
  ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
  மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
  வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
 • 56. கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்
  உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்
  திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்
  எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே.
 • 57. வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
  நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
  தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
  தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.
 • 58. பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
  உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
  பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
  மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
 • 59. மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
  உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
  அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
  கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.
 • 60. எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
  முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
  வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
  உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
 • 61. பொன்கின்று151 பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
  நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
  தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
  என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே.
 • 62. வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
  பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
  சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
  தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
 • 63. கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
  தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
  வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
  ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
 • 64. விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
  படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
  கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
  புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.
 • 65. நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
  பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
  கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
  குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.
 • 66. சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
  மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
  இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
  அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
 • 67. புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
  சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
  கல்லள152 வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
  நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே.
 • 68. பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
  கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
  மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
  குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
 • 69. கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
  பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
  எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
  புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
 • 70. மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
  நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
  பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
  கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.
 • 71. அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
  தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
  பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
  இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
 • 72. அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
  கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
  துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
  தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
 • 73. தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
  ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
  கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
  வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
 • 74. போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
  பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
  வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
  சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே.
 • 75. இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம்
  ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல்
  மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக்
  கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே.
 • 76. படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
  மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
  அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
  பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
 • 77. உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்
  தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான்
  நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால்
  அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே.
 • 78. தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
  பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
  எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
  வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே.
 • 79. பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
  ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
  வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
  அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
 • 80. சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
  மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
  கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
  பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
 • 81. வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
  பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
  துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
  என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
 • 82. நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
  சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
  கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
  றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
 • 83. கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
  துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
  பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
  குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
 • 84. விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
  திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
  துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
  பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
 • 85. எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
  நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
  வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
  மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.
 • 86. வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
  தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
  சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
  இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
 • 87. பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
  சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
  துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
  பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே.
 • 88. அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
  பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
  இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
  தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.
 • 89. பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
  சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
  அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
  கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
 • 90. நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
  ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
  வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
  தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
 • 91. உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற
  நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை
  விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்
  சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.
 • 92. வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
  கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
  தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
  பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
 • 93. அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
  இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
  என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
  வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
 • 94. மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
  கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
  மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
  நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
 • 95. வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
  மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
  காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
  பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
 • 96. மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
  இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
  குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
  முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.
 • 97. முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
  பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
  நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
  பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
 • 98. நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
  கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
  சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
  ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
 • 99. வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
  இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
  உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
  களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
 • 100. காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
  சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
  தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
  சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
 • 101. அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
  சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
  பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
  வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
 • 102. பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ
  மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ
  தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம்
  என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே.
 • 103. நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
  வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
  தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
  மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
 • 104. பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
  வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
  ` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
  தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
 • 105. நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
  பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
  தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
  இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
 • 106. எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
  மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
  விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
  வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
 • 107. கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
  நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
  கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
  கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
 • 108. தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
  இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
  அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
  வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.
 • 109. கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
  எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
  உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
  நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.
 • 110. அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
  சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
  இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
  எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
 • 111. ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
  தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
  வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
  தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
 • 112. மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
  காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
  சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
  நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.
 • 113. ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
  கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
  நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
  ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.
 • 114. அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர்
  கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
  சொல்லுண்ட157 வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
  கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.
 • 115. காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
  யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
  நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
  சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
 • 116. வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
  புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
  விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
  தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
 • 117. குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
  வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
  பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
  திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
 • 118. பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
  விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
  கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
  திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.
 • 119. அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
  கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
  இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
  தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே.
 • 120. ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
  மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
  காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
  சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.
 • 121. கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
  பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
  புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
  ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
 • 122. வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள்
  தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த
  நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர்
  வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே.
 • 123. காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
  நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
  பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
  ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
 • 124. வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
  மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
  ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
  காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
 • 125. மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
  நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
  போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
  ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
 • 126. ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
  பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
  சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
  கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே.
 • 127. பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
  திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
  விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
  கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
 • 128. மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
  காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
  கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
  பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
 • 129. என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
  சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
  தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
  நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
 • 130. மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
  நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
  பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
  கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.
 • 131. நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
  சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
  இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
  சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
 • 132. சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
  பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
  நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
  கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
 • 133. சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
  கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
  நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
  இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
 • 134. திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
  வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
  ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
  கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
 • 135. சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
  கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
  பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
  ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
 • 136. தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
  ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
  நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
  ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
 • 137. பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
  கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
  மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
  தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.
 • 138. கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
  மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
  நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
  சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே.
 • 139. வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
  தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
  கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
  ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.
 • 140. வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
  மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
  ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
  பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.
 • 141. தெண்­ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
  கண்­ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
  புண்­ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
  மண்­ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.
 • 142. கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
  அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
  துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
  துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.
 • 143. மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
  பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
  துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
  குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.
 • 144. சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம்
  சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே
  அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே
  இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே.
 • 145. பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
  செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
  திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
  எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.
 • 146. வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோய்வன்தொண்டர் விரும்புறச்செங்
  கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
  புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
  வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே.
 • 147. கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
  ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
  சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
  வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
 • 148. வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
  ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
  உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
  தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
 • 149. எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
  உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
  தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
  வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
 • 150. நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
  குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
  பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
  உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
 • 151. துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
  அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
  படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
  குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
 • 152. ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
  பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
  மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
  திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
 • 153. வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
  கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
  மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
  மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
 • 154. விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
  கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
  தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
  மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
 • 155. தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திரு­த்
  துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
  எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
  பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
 • 156. பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
  திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
  கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
  மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
 • 157. மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
  கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
  பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
  மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
 • 158. தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
  அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
  உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
  சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
 • 159. மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
  பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
  கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
  திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
 • 160. ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
  பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
  ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
  மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.
 • 161. ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
  துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
  செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
  உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
 • 162. சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
  நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
  கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
  பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
 • 163. கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
  சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
  போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
  பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
 • 164. வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
  தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
  ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
  மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.
 • 165. அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
  சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
  திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
  கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே.
 • 166. சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
  வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
  புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
  மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
 • 167. சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
  காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
  பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
  போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
 • 168. சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
  மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
  மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
  பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
 • 169. இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
  கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
  புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
  துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
 • 170. நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
  புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
  கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
  முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
 • 171. விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
  உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
  கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
  கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே.
 • 172. நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
  வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
  செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
  பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே.
 • 173. சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
  தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
  தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
  கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
 • 174. எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
  நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
  சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
  கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே.
 • 175. பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
  மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
  நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
  குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.
 • 176. மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
  காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
  போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
  பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
 • 177. ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
  நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
  குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
  மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
 • 178. தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
  வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
  ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
  பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
 • 179. வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
  தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
  பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
  கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
 • 180. மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
  சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
  கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
  விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
 • 181. மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
  மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
  கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
  கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
 • 182. உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
  விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
  தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
  கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.
 • 183. மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
  பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
  கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
  பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
 • 184. வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
  தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
  மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
  நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.
 • 185. ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
  நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
  மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
  ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.
 • 186. சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
  ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
  தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
  வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
 • 187. கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
  குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
  உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
  மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.
 • 188. களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
  றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
  வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
  இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
 • 189. மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
  காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
  தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
  நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
 • 190. ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
  காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
  ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
  சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
 • 191. தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
  சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
  பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
  ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
 • 192. வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
  போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
  வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
  சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
 • 193. இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
  என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
  அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
  தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
 • 194. களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
  வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
  மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
  உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
 • 195. காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
  தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
  சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
  பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
 • 196. கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
  பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
  இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
  சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
 • 197. வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
  எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
  தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
  செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
 • 198. சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
  வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
  நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
  ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
 • 199. பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
  திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
  கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
  நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.
 • 200. என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
  என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
  என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
  என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
 • 201. கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
  மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
  வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
  தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
 • 202. வேதனென் கோதற வேண்டுமென் கோஎன விண்ணப்பஞ்செய்
  பாதனென் கோகடற் பள்ளிகொண் டான்தொழும் பண்பன்என்கோ
  நாதனென் கோபர நாதனென் கோஎங்கள் நம்பிக்குநல்
  தூதனென் கோஅவன் தோழனென் கோநினைத் தூய்மணியே.
 • 203. இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
  மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
  வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
  புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
 • 204. சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
  சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
  சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
  சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.
 • 205. மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
  துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
  கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
  பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
 • 206. கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
  கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
  அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
  இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.
 • 207. இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
  விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
  கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
  புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.
 • 208. உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
  கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
  தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
  மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
 • 209. என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
  முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
  தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
  மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.
 • 210. போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
  போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
  போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
  போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
 • 211. கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
  நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
  நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
  பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
 • 212. நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
  வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
  தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
  ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
 • 213. இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
  கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
  கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
  வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
 • 214. ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
  பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
  எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
  கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
 • 215. தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
  இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
  முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
  வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
 • 216. மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
  நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
  செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
  தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
 • 217. இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
  மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
  கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
  நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
 • 218. உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
  நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
  புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
  விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
 • 219. அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
  அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
  அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
  அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
 • 220. நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
  தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
  அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
  விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
 • 221. மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
  கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
  வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
  பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
 • 222. முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
  தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
  இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
  மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
 • 223. புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
  திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
  சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
  எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
 • 224. மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
  கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
  தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
  நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
 • 225. மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
  தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
  போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
  பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.
 • 226. கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
  மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
  சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
  பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.
 • 227. புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
  மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
  அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
  இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.
 • 228. கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
  சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
  நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
  அல்லென்று வெல்களங் கொண்டோய்என் செய்வ தறிந்திலனே.
 • 229. கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
  உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
  எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
  தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே.
 • 230. மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
  இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
  செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
  ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
 • 231. மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
  துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
  பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
  கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
 • 232. இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
  புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்
  கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே
  திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.

  • 145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
  • 146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
  • 147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
  • 148. செல் - மேகம். தொ. வே.
  • 149. உரும் - இடி. தொ. வே.
  • 150. மாழை - பொன். தொ. வே.
  • 151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
  • 152. கல் - மலை. தொ. வே.
  • 153. வேணி - நதி. தொ. வே.
  • 154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
  • 155. பாணி - கை, நீர். ச. மு. க.
  • 156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
  • 157. சொல் - நெல், தொ. வே.
  • 158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.

திருவருண் முறையீடு // திருவருண் முறையீடு