திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கலைமகளார் திருப்பதிகம்
kalaimakaḷār tiruppatikam
பாங்கியர்க் கறிவுறுத்தல்
pāṅkiyark kaṟivuṟuttal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

102. ஆனந்த களிப்பு
āṉanta kaḷippu

    புள்ளிருக்குவேளூர்
    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. நல்ல மருந்திம் மருந்து - சுகம்
    நல்கும் வைத்திய நாத மருந்து.
  • கண்ணிகள்
  • 2. அருள்வடி வான மருந்து - நம்முள்
    அற்புத மாக அமர்ந்த மருந்து
    இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
    கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல
  • 3. சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
    தானோதா னாகித் தழைக்கும் மருந்து
    அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
    தானந்த மாக அமர்ந்த மருந்து. - நல்ல
  • 4. வித்தக மான மருந்து - சதுர்
    வேத முடிவில் விளங்கு மருந்து
    தத்துவா தீத மருந்து - என்னைத்
    தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. - நல்ல
  • 5. பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
    பேசப் படாத பெரிய மருந்து
    இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
    என்று மதுரித் தினிக்கு மருந்து. - நல்ல
  • 6. நானது வாகு மருந்து - பர
    ஞான வெளியில் நடிக்கு மருந்து
    மோந வடிவா மருந்து - சீவன்
    முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல
  • 7. புத்தமு தாகு மருந்து - பார்த்த
    போதே பிணிகளைப் போக்கு மருந்து
    பத்த ரருந்து மருந்து - அநு
    பானமுந் தானாம் பரம மருந்து. - நல்ல
  • 8. மாலயன் தேடு மருந்து - முன்ன
    மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
    காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
    காணுங் கனவினுங் காணா மருந்து. - நல்ல
  • 9. தற்பர யோக மருந்து - உப
    சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
    சிற்பர யோக மருந்து - உயர்
    தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. - நல்ல
  • 10. அம்பலத் தாடு மருந்து - பர
    மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
    எம்பல மாகு மருந்து - வேளூர்
    என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. - நல்ல
  • 11. சேதப்ப டாத மருந்து - உண்டால்
    தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
    பேதப்ப டாத மருந்து - மலைப்
    பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
  • 12. ஆர்க்கு மரிதா மருந்து - தானே
    ஆதி யநாதியு மான மருந்து
    சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
    தேடுவோர் தங்களை நாடு மருந்து. - நல்ல
  • 13. புண்ணியர்க் கான மருந்து - பரி
    பூரண மாகப் பொருந்து மருந்து
    எண்ணிய வின்ப மருந்து - எம
    தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து. - நல்ல
  • 14. பால்வண்ண மாகு மருந்து - அதில்
    பச்சை நிறமும் படர்ந்த மருந்து
    நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
    நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. - நல்ல
  • 15. பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
    பாராத வர்களைச் சேரா மருந்து
    கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
    கூல மருந்தென்று கொண்ட மருந்து. - நல்ல
  • 16. கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
    கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
    மாதொரு பாக மருந்து - என்னை
    வாழ்வித்த என்கண் மணியா மருந்து. - நல்ல
  • 17. ஏக வுருவா மருந்து - மிக்க
    ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
    சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
    சோதியென் றன்பர் துதிக்கு மருந்து. - நல்ல
  • 18. கோமளங் கூடு மருந்து - நலங்
    கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
    நாமள வாத மருந்து - நம்மை
    நாமறி யும்படி நண்ணு மருந்து. - நல்ல
  • 19. செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்
    தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
    நல்வந் தனைகொள் மருந்து - பர
    நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து. - நல்ல
  • 20. வாய்பிடி யாத மருந்து - மத
    வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
    நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
    நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. - நல்ல
  • 21. பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
    பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
    மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
    வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. - நல்ல
  • 22. என்றுங் கெடாத மருந்து - வரும்
    எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
    துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்
    சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து. - நல்ல
  • 23. கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
    கண்டு கலந்து களிக்கு மருந்து
    விண்ணொளி யாரு மருந்து - பர
    வீடு தருங்கங்கை வேணி மருந்து. - நல்ல
  • 24. காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
    கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
    தாயாங் கருணை மருந்து - சிற்
    சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து. - நல்ல
  • 25. அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
    அருமை யருமை யருமை மருந்து
    உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
    ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து. - நல்ல
  • 26. தன்மய மாகு மருந்து - சிவ
    சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
    சின்மய ஜோதி மருந்து - அட்ட
    சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து. - நல்ல
  • 27. மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
    மறவா தவருள் வழங்கு மருந்து
    இறந்தா லெழுப்பு மருந்து - எனக்
    கென்றுந் துணையா யிருக்கு மருந்து. - நல்ல
  • 28. கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
    கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
    இரும்பைக் குழைக்கு மருந்து - பே
    ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. - நல்ல
  • 29. அணிமணி கண்ட மருந்து - அருள்
    ஆநந்த சுத்த வகண்ட மருந்து
    பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
    பேசா மருந்தென்று பேசு மருந்து. - நல்ல
  • 30. மூவர்க் கரிய மருந்து - செல்வ
    முத்துக் குமாரனை யீன்ற மருந்து
    நாவிற் கினிய மருந்து - தையல்
    நாயகி கண்டு தழுவு மருந்து.
  • 31. நல்ல மருந்திம் மருந்து - சுகம்
    நல்கும் வைத்திய நாத மருந்து.

நல்ல மருந்து // ஆனந்த களிப்பு