திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அன்பு மாலை
aṉpu mālai
பிரசாத மாலை
pirasāta mālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

002. அருட்பிரகாச மாலை
aruṭpirakāsa mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
    உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
    இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
    இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
    கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
    களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
    அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
    ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
  • 2. ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
    உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
    அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
    அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
    களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
    கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
    தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
    தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
  • 3. திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
    தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
    வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
    வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
    தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
    செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
    குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
    குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
  • 4. அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
    தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
    மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
    வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
    ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
    ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
    இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
    என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
  • 5. இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
    தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
    சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
    களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
    உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
    உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
    அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
    ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
  • 6. இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
    இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
    கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
    கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
    மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
    மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
    புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
    பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
  • 7. ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
    உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
    மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
    வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
    தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
    தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
    வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
    மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
  • 8. நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
    நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
    தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
    தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
    கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
    கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
    கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
    குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
  • 9. மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
    மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
    குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
    கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
    கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
    கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
    பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
    பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
  • 10. அன்றகத்தே அடிவருத் நடந்தென்னை அழைத்திங்
    கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
    துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
    சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
    இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
    தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
    மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
    வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
  • 11. அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
    அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
    வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
    மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
    துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
    தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
    என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
    என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
  • 12. ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
    நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
    காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
    கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
    சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
    சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
    ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
    அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
  • 13. இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
    இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
    மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
    மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
    தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
    திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
    அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
    ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
  • 14. கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
    கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
    தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
    துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
    வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
    மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
    தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
    தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
  • 15. பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
    பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
    கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
    கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
    சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
    தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
    மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
    மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
  • 16. ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
    உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
    ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
    தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
    பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
    பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
    ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
    அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
  • 17. அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
    அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
    கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
    கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
    உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
    உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
    பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
    பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
  • 18. காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
    கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
    ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
    உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
    ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
    யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
    பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
    பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
  • 19. துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
    சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
    பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
    பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
    உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
    உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
    பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
    பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
  • 20. நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
    நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
    ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
    அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
    வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
    வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
    கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
    கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
  • 21. சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
    தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
    சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
    தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
    மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
    மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
    சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
    சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
  • 22. பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
    பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
    சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
    தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
    அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
    அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
    விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
    விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
  • 23. செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
    திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
    துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
    உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
    மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
    மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
    ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
    அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
  • 24. உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
    உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
    நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
    நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
    எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
    என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
    அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
    அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
  • 25. விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
    விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
    துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
    தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
    களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
    களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
    குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
    குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
  • 26. வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
    விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
    பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
    போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
    நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
    நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
    ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
    உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
  • 27. தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
    தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
    கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
    கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
    இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
    என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
    திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
    சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.
  • 28. மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
    வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
    ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
    தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
    தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
    தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
    கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
    கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
  • 29. படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
    பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
    நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
    நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
    இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
    இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
    தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
    தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
  • 30. முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
    முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
    அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
    தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
    என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
    டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
    மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
    வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
  • 31. மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
    மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
    சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
    செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
    மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
    மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
    ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
    ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
  • 32. வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
    விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
    நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
    நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
    போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
    புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
    சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
    துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
  • 33. ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
    ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
    அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
    அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
    பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
    பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
    கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
    கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
  • 34. விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
    விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
    வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
    மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
    இந்துநிலை முடிமுதராந் திருஉருவங் காட்டி
    என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
    முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
    முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
  • 35. நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
    நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
    அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
    அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
    சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
    சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
    பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
    பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.
  • 36. புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
    பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
    நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
    நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
    எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
    எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
    தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
    தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
  • 37. மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
    முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
    யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
    எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
    தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
    சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
    பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
    புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
  • 38. கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
    கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
    மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
    மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
    நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
    நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
    அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
    அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
  • 39. கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
    கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
    மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
    மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
    பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
    பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
    அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
    னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
  • 40. அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
    அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
    தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
    சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
    மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
    மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
    இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
    எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
  • 41. முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
    முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
    கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
    கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
    பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
    பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
    தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
    தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
  • 42. மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
    மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
    பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
    பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
    நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
    நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
    நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
    நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே .
  • 43. சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
    சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
    கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
    கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
    காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
    கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
    ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
    ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
  • 44. தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
    தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
    எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
    தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
    பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
    புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
    சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
    சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
  • 45. கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
    கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
    வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
    விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
    அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
    அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
    நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
    நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
  • 46. ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
    உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
    அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
    அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
    நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
    நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
    இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
    என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
  • 47. எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
    என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
    பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
    போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
    தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
    தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
    இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
    இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
  • 48. சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
    சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
    மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
    வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
    அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
    அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
    முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
    முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
  • 49. சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
    தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
    பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
    பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
    புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
    பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
    உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
    உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
  • 50. உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
    உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
    கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
    கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
    நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
    நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
    தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
    செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
  • 51. தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
    தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
    பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
    பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
    தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
    தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
    என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
    என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
  • 52. அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
    அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
    கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
    கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
    தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
    துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
    உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
    உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
  • 53. அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
    தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
    பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
    பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
    செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
    திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
    பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
    பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
  • 54. விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
    விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
    கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
    கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
    இடையின்அது நான்மறுப்பு மறுக்கேல்என் மகனே
    என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
    உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
    உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
  • 55. நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
    நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
    ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
    யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
    ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
    கறிவிலயேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
    ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
    இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
  • 56. அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
    அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
    பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
    போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
    தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
    சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
    மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
    மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
  • 57. பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
    பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
    மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
    வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
    தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
    செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
    திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
    திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
  • 58. என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
    என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
    தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
    தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
    முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
    முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
    மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
    வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
  • 59. பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
    பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
    வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
    வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
    திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
    செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
    உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
    உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
  • 60. சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
    துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
    கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
    கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
    என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
    என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
    தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
    தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
  • 61. முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
    முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
    பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
    படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
    சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
    திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
    சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
    தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
  • 62. எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
    இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
    தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
    தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
    கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
    களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
    உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
    உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
  • 63. இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
    எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
    எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
    இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
    செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
    சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
    உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
    உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
  • 64. அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
    றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
    என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
    எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
    துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
    தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
    முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
    முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
  • 65. மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
    மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
    யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
    உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
    போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
    புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
    நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
    நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
  • 66. காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
    காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
    பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
    பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
    கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
    குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
    மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
    மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
  • 67. ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
    அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
    வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
    விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
    பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
    பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
    சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
    சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
  • 68. கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
    காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
    ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
    றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
    துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
    துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
    வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
    வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
  • 69. ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
    கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
    சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
    சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
    வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
    விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
    பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
    பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
  • 70. இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
    எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
    பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
    பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
    மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
    வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
    அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
    ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
  • 71. உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
    உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
    சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
    சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
    பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
    பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
    நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
    நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
  • 72. ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
    அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
    தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
    திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
    கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
    களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
    சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
    தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
  • 73. அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
    ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
    இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
    யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
    மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
    மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
    தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
    சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
  • 74. நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
    நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
    தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
    தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
    தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
    தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
    வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
    மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
  • 75. யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
    உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
    ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
    என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
    வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
    வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
    மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
    முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
  • 76. மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
    மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
    மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
    மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
    தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
    தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
    அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
    அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
  • 77. இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
    எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
    உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
    உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
    திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
    தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
    குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
    குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
  • 78. தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
    சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
    எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
    இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
    கம்மடியா185க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
    கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
    நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
    நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
  • 79. உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
    உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
    செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
    தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
    வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
    மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
    இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
    இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
  • 80. உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
    உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
    துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
    சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
    தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
    சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
    மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
    மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
  • 81. பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
    பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
    பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
    போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
    மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
    வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
    ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
    றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
  • 82. உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
    உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
    அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
    அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
    களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
    கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
    விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
    விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
  • 83. எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
    இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
    தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
    சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
    இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
    எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
    அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
    அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
  • 84. மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
    வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
    ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
    றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
    தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
    திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
    வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
    மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
  • 85. பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
    பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
    அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
    அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
    வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
    மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
    விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
    விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
  • 86. ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
    அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
    சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
    துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
    பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
    படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
    ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
    உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
  • 87. பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
    பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
    ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
    அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
    நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
    நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
    வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
    மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
  • 88. எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
    எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
    அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
    அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
    இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
    எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
    சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
    தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
  • 89. பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
    போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
    வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
    வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
    நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
    நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
    ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
    என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
  • 90. வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
    வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
    தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
    தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
    மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
    மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
    ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
    அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
  • 91. புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
    பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
    இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
    இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
    மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
    மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
    பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
    புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
  • 92. தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
    தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
    வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
    வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
    எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
    தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
    விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
    மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
  • 93. எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
    எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
    வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
    வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
    அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
    ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
    இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
    எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
  • 94. மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
    வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
    பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
    போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
    தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
    தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
    நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
    நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
  • 95. மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
    மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
    கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
    கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
    உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
    உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
    தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
    தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
  • 96. நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்
    நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
    தொடுங்கவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
    துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
    கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
    கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
    இடுங்கிடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
    ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.
  • 97. வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
    மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
    துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
    துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
    உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
    உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
    வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
    மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
  • 98. சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
    சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
    செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
    தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
    பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
    பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
    பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
    பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
  • 99. அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
    தாட்கொண்டேன் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
    படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
    படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
    பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
    பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
    பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்
    பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
  • 100. உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
    உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
    திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
    திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
    இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
    இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
    புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
    பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.

    • 185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது. பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க

அருட்பிரகாச மாலை // அருட்பிரகாச மாலை