திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
paṇittiṟañ sālāp pāṭiḻivu
பணித்திறஞ் சாலாமை
paṇittiṟañ sālāmai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

025. காணாப் பத்து
kāṇāp pattu

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
  திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
  தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
  கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 2. வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
  எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
  சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
  கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 3. உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
  திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
  அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
  கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 4. போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
  சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
  ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
  காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 5. வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
  நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
  கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
  காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 6. மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
  சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
  எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
  கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 7. இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
  விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
  தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
  கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 8. விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
  தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
  திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
  கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 9. பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
  வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
  உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
  கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
 • 10. அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
  விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
  நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
  கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

காணாப் பத்து // காணாப் பத்து