திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபராத மன்னிப்பு மாலை
aparāta maṉṉippu mālai
ஆளுடைய அரசுகள் அருண்மாலை
āḷuṭaiya arasukaḷ aruṇmālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

009. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
āḷuṭaiya piḷḷaiyār aruṇmālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
    திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
    விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
    திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
  • 2. உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
    செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
    பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
    பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
  • 3. தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
    ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
    றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
    சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
  • 4. தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
    பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
    இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
    றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
  • 5. உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
    நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
    விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
    றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
  • 6. பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருள்அரு ளனுபவம் அதற்குப்
    பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்றறப் பற்றுதி இதுவே
    சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
    முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே.
  • 7. அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால்
    படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி
    மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய்
    வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே.
  • 8. செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில்
    எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும்
    இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே
    தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.
  • 9. முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால்
    அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே
    என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
    இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
  • 10. வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
    ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
    பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
    உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே.
  • பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 11. சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
    தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
    காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
    கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
    ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
    இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
    பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
    பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1

    • 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
    • 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.

ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை // ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை