திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆளுடைய அரசுகள் அருண்மாலை
āḷuṭaiya arasukaḷ aruṇmālai
ஆளுடைய அடிகள் அருண்மாலை
āḷuṭaiya aṭikaḷ aruṇmālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

011. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை
āḷuṭaiya nampikaḷ aruṇmālai

    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
    துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
    விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
    வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
  • 2. நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
    சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
    ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
    ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
  • 3. இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
    தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
    கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
    மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
  • 4. வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
    ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
    பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
    மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
  • 5. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
    ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
    தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
  • 6. வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
    தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
    கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
    நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
  • 7. தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
    நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
    ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
    தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
  • 8. இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
    உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
    றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
    அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
  • 9. பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
    உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
    வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
    தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
  • 10. பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
    ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
    தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
    ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.

    • 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
    • 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.

ஆளுடைய நம்பிகள் அருண்மாலை // ஆளுடைய நம்பிகள் அருண்மாலை