49. உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
50. பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
51. நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
58. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
124. இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
125. அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
126. பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
127. இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.