1. இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
3. சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
4. மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
5. பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
6. துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
9. வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
10. இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.