Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அழிவுறா அருள்வடிவப் பேறு
aḻivuṟā aruḷvaṭivap pēṟu
பொன்வடிவப் பேறு
poṉvaṭivap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
095. பேரருள் வாய்மையை வியத்தல்
pēraruḷ vāymaiyai viyattal
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
1.
நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
2.
தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
3.
திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
4.
மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
5.
வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
6.
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
7.
ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
8.
என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
9.
அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
10.
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
பேரருள் வாய்மையை வியத்தல் // பேரருள் வாய்மையை வியத்தல்
No audios found!
Oct,12/2014: please check back again.