திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கண்கொளாக் காட்சி
kaṇkoḷāk kāṭsi
கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
kaṇṭēṉ kaṉintēṉ kalantēṉ eṉal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

041. காட்சிக் களிப்பு
kāṭsik kaḷippu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
    அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
    செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
    சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
    பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
    பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
    எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 2. பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
    பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
    காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
    கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
    மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
    மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
    ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 3. உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
    உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
    கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
    கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
    தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
    தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
    எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 4. உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
    உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
    மறவானை அறவாழி வழங்கி னானை
    வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
    திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
    சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
    இறவானைப் பிறவானை இயற்கை யானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 5. அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
    அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
    மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
    மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
    சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
    தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
    இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 6. செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
    திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
    மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
    வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
    கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
    கையானை என்னைஎன்றும் கையா தானை
    எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
    ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 7. மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
    மந்திரங்க ளானானை வான நாட்டு
    விருந்தானை உறவானை நண்பி னானை
    மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
    பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
    பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
    இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 8. ஆன்றானை அறிவானை அழிவி லானை
    அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
    மூன்றானை இரண்டானை ஒன்றானானை
    முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
    தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
    சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
    ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 9. தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
    சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
    வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
    வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
    வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
    மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
    ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
  • 10. நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
    நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
    நின்றானைப் பொன்றாத நிலையி னானை
    நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
    ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
    ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
    என்றானை என்றும்உள இயற்கை யானை
    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

    • 268. ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.

காட்சிக் களிப்பு // காட்சிக் களிப்பு