திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தனித் திருமாலை
taṉit tirumālai
எண்ணப் பத்து
eṇṇap pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

005. பிரார்த்தனை மாலை
pirārttaṉai mālai

  திருத்தணிகைப் பதிகங்கள்
  கட்டளைக் கலித்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
  தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
  கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
  கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
 • 2. கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
  மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
  திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
  வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
 • 3. மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
  ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
  தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
  பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
 • 4. அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
  என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
  பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
  மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.
 • 5. மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
  கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
  பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
  நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.
 • 6. நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
  மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
  பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
  அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.
 • 7. அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
  சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
  குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
  எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.
 • 8. கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
  துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
  கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
  தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
 • 9. சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
  தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
  கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
  பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
 • 10. போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
  சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
  ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
  மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
 • 11. வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
  மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
  கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
  கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
 • 12. குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
  வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
  தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
  கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
 • 13. உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
  எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
  புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
  மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
 • 14. வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
  நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
  ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
  தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.
 • 15. கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
  ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
  மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
  செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.
 • 16. செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
  வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
  அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
  மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
 • 17. கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
  வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
  தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
  நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
 • 18. நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
  அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
  சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
  இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
 • 19. இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
  பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
  கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
  திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
 • 20. தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
  கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
  என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
  துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
 • 21. அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே
  துடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்
  படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்
  கடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே.
 • 22. தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
  சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
  வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
  திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
 • 23. என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
  வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
  மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
  தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.
 • 24. சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
  சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
  ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
  வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
 • 25. மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
  தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
  கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
  தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
 • 26. தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
  பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
  கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
  அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
 • 27. அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
  கடையான நாய்க்குள் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே
  உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
  படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.
 • 28. பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
  கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
  விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
  புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.
 • 29. பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
  என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
  மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
  இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
 • 30. சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
  வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
  எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
  செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.

பிரார்த்தனை மாலை // பிரார்த்தனை மாலை