திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital
உறுதி உணர்த்தல்
uṟuti uṇarttal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

032. புண்ணியநீற்று மான்மியம்
puṇṇiyanīṟṟu māṉmiyam

    வண்ணக் கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
    பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
    கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
    சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
  • 2. மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
    கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
    மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
    வேல்ஏந்திய முருகாஎன வெண்­றணிந் திடிலே.
  • 3. தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
    நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
    பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
    சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
  • 4. துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
    கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
    குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
    மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
  • 5. தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
    மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
    வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
    ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
  • 6. அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
    தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
    எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
    குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
  • 7. மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
    மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
    சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
    பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
  • 8. அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
    மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
    சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
    முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
  • 9. சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
    நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
    இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
    கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
  • 10. எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
    நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
    பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
    கண்ணாஎம தண்ணாஎனக் கனநீறணிந் திடிலே.

    • 10. ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்.தொ.வே.

புண்ணியநீற்று மான்மியம் // புண்ணியநீற்று மான்மியம்