திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவானந்தப் பற்று
sivāṉantap paṟṟu
நற்றாய் கூறல்
naṟṟāy kūṟal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

074. தலைவி தோழிக்கு உரைத்தல்
talaivi tōḻikku uraittal

    கலித்தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
    மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
    நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
    நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
  • 2. தொம்பத உருவொடு தத்பத வெளியில்
    தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
    எம்பதமாகி இசைவாயோ தோழி
    இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
  • 3. சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
    திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
    என்மய மாகி இருப்பாயோ தோழி
    இச்சை மயமாய் இருப்பாயோ288 தோழி.
  • 4. நவநிலை மேற்பர நாதத் தலத்தே
    ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
    மவுனத் திருவீதி வருவாயோ தோழி
    வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
  • 5. ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
    அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
    ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
    ஏறி இழிந்திங் கிறப்பாயோ289 தோழி.
  • 6. வகார வெளியில் சிகார உருவாய்
    மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
    விகார உலகை வெறுப்பாயோ தோழி
    வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
  • 7. நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
    நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
    சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
    துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
  • 8. அறிவில் அறிவை அறியும் பொதுவில்
    ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
    செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
    செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
  • 9. என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
    இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
    நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
    நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.
  • 10. துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
    ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
    கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
    காணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.
  • 11. தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
    சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
    கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
    குறியா துலகில் வெறிப்பாயோ தோழி.

    • 288. மயமாய்ப் பெருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
    • 289. இருப்பாயோ - முதற்பதிப்பு.
    • 290. பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,

உபதேச வினா // தலைவி தோழிக்கு உரைத்தல்