திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்பெருஞ்சோதி அடைவு
aruṭperuñsōti aṭaivu
உத்திரஞானசிதம்பர மாலை
uttirañāṉasitampara mālai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

083. அடிமைப் பேறு
aṭimaip pēṟu

  நேரிசை வெண்பா
  திருச்சிற்றம்பலம்
 • 1. அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
  பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
  எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
  அச்சோ எனக்கவன்போல் ஆர்.
 • 2. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
  காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
  றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
  செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
 • 3. சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
  பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
  துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
  இன்பமெலாம் தந்தான் இசைந்து.
 • 4. இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
  நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
  மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
  தாயைமகிழ் அம்பலவன் தான்.
 • 5. தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
  தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
  நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
  வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
 • 6. மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
  தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
  தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
  தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
 • 7. தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
  ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
  றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
  எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
 • 8. ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
  நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
  தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
  சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
 • 9. தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
  புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
  சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
  நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
 • 10. நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
  வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
  தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
  அம்பலவன் தன்அருளி னால்.

அடிமைப் பேறு // அடிமைப் பேறு

No audios found!