திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருமுன் விண்ணப்பம்
tirumuṉ viṇṇappam
அபயம் இடுதல்
apayam iṭutal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

034. இறை எளிமையை வியத்தல்
iṟai eḷimaiyai viyattal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
    பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
    விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
    மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
    கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
    கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
    நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
    நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
  • 2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
    தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
    மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
    வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
    போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
    புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
    நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
    நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
  • 3. வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
    மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
    போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
    பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
    பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
    பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
    நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
    நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
  • 4. ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
    அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
    ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
    இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
    பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
    பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
    நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
    நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
  • 5. பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
    பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
    ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
    அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
    வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
    மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
    சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
    திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
  • 6. ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
    உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
    வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
    வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
    கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
    கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
    நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
    நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
  • 7. கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
    கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
    எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
    என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
    பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
    பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
    விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
    வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
  • 8. பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
    புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
    சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
    தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
    எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
    இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
    இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
    என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
  • 9. கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
    கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
    துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
    துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
    விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
    விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
    பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
    பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
  • 10. அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
    அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
    முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
    முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
    செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
    சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
    இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
    என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.

இறை எளிமையை வியத்தல் // இறை எளிமையை வியத்தல்

No audios found!