திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திரு உந்தியார்
tiru untiyār
பற்றறுத்தல்
paṟṟaṟuttal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

065. அடைக்கலம் புகுதல்
aṭaikkalam pukutal

  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
  தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
  கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
  அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
 • 2. திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
  பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
  கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
  அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
 • 3. தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
  ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
  வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
  லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
 • 4. கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
  புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
  தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
  அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
 • 5. இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
  முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
  சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
  அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
 • 6. நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
  வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
  பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
  ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
 • 7. பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
  கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
  நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
  ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
 • 8. கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
  மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
  எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
  அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
 • 9. புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
  தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
  கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
  அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
 • 10. பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
  நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
  எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
  அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
 • 11. இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
  மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
  தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
  அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

அடைக்கலம் புகுதல் // அடைக்கலம் புகுதல்

No audios found!