திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
pāṅki talaivipeṟṟi uraittal
தலைவி வருந்தல்
talaivi varuntal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

077. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
talaivi talaivaṉ seyalait tāyk kuraittal

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
  அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
  துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
  சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
  உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
  ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
  என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 2. அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
  அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
  விதுபா வகமுகத் தோழியும் நானும்
  மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
  பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
  பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
  இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 3. அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
  அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
  உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
  உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
  புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
  பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
  இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 4. அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
  அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
  நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
  நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
  பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
  பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
  இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 5. தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
  சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
  ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
  உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
  அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
  அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
  இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 6. மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
  வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
  இக்குல மாதரும் யானும்என் நாதர்
  இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
  பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
  பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
  எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 7. வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
  வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
  சம்மத மாமட வார்களும் நானும்
  தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
  இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
  ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
  எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 8. பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
  பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
  வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
  மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
  ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
  எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
  ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 9. மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
  மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
  சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
  சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
  புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
  புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
  இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 • 10. ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
  அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
  தேறறி வாகிச் சிவானு பவத்தே
  சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
  மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
  வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
  ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
  என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

  • 365. அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.
  • 366. எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,

தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் // தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்

No audios found!