6. நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
7. முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
8. மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.