திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மருண்மாலை விண்ணப்பம்
maruṇmālai viṇṇappam
வேட்கை விண்ணப்பம்
vēṭkai viṇṇappam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

014. பொறுக்காப் பத்து
poṟukkāp pattu

    எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
    விரைமலர்த் துணைதமை விரும்பாப்
    பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
    அளித்திடும் தெள்ளிய அமுதே
    தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 2. நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
    நளினமா மலர்அடி வழுத்தாப்
    புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
    சேர்ந்திடத் திருவருள் புரியாய்
    தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 3. மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
    மனமுற நினைந்தகத் தன்பாம்
    பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
    அன்பர்பால் இருந்திட அருளாய்
    தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 4. நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
    நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
    புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
    வருந்திஈன் றெடுத்தமா மணியே
    தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 5. வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
    மலர்அடி மனம்உற வழுத்தாப்
    புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
    உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
    சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 6. கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
    கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
    பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
    அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
    தற்பரா பரமே சற்குண மலையே
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 7. பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
    பரஞ்சுடர் நின்அடி பணியும்
    புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    நித்திய அடியர் தம்முடன் கூட்ட
    நினைந்திடில் உய்குவன் அரசே
    சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 8. நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
    நின்அடிக் கமலங்கள் நினைந்தே
    போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
    ஆச்செயில் உய்குவன் அமுதே
    சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 9. பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
    பாததா மரைகளுக் கன்பு
    புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
    திருவுளம் அறிகிலன் தேனே
    சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
    தணிகைவாழ் சரவண பவனே.
  • 10. எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
    ஏத்திடா தழிதரும் செல்வப்
    புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
    பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
    கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
    கலந்திடில் உய்குவன் கரும்பே
    தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
    தணிகைவாழ் சரவண பவனே.

பொறுக்காப் பத்து // பொறுக்காப் பத்து