திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
காதற் சிறப்புக் கதுவா மாண்பு
kātaṟ siṟappuk katuvā māṇpu
காதல் மாட்சி
kātal māṭsi
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

018. ஆற்றா விரகம்
āṟṟā virakam

    தோழியொடு கூறல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
    மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
    நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
    ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 2. காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
    போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
    சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
    ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 3. பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
    கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
    நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
    எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 4. ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
    வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
    சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
    யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 5. சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
    சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
    தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
    ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 6. வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
    தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
    ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
    இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
  • 7. திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
    மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
    அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
    இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 8. அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
    நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
    இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
    இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
  • 9. மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
    சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
    பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
    கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
  • 10. மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
    ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
    பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
    ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

ஆற்றா விரகம் // ஆற்றா விரகம்

No audios found!