Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
செய்பணி வினவல்
seypaṇi viṉaval
திருப்பள்ளி எழுச்சி
tiruppaḷḷi eḻuchsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
062. ஆற்ற மாட்டாமை
āṟṟa māṭṭāmai
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
2.
புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
3.
கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
4.
பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
5.
இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
6.
எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
7.
செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
8.
துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
9.
ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
10.
வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
ஆற்ற மாட்டாமை // ஆற்ற மாட்டாமை
No audios found!
Oct,12/2014: please check back again.