6. இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
7. மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
8. ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
9. ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
10. மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
12. பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
278. 4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக்கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதிகருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.