திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடராஜபதி மாலை
naṭarājapati mālai
தத்துவ வெற்றி
tattuva veṟṟi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

098. சற்குருமணி மாலை
saṟkurumaṇi mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
    மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
    கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
    கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
    வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
    விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
    சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 2. கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
    கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
    சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
    துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
    சிற்கரை திரையறு திருவருட் கடலே
    தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
    சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 3. என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
    என்அறி வேஎன தறிவினுக் கறிவே
    அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
    அற்புத மேபத மேஎன தன்பே
    பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
    பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
    தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 4. காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
    கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
    தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
    சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
    ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
    அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
    தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 5. உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
    உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
    கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
    கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
    திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
    சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
    தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 6. ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
    அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
    கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
    கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
    பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
    பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
    சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 7. சாகாத தலைஇது வேகாத காலாம்
    தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
    போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
    பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
    ஆகாத பேர்களுக் காகாத நினைவே
    ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
    தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 8. தத்துவ மசிநிலை இதுஇது தானே
    சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
    எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
    ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
    சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
    செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
    சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 9. இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
    இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
    விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
    மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
    பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
    புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
    சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 10. என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
    இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
    முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
    முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
    இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
    இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
    தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 11. காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
    காரண காரியக் கருவிது பலவாய்
    ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
    அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
    பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
    பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
    தாரணி தனில்என்ற தயவுடை அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 12. பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
    பவநெறி இதுவரை பரவிய திதனால்
    செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
    புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 13. அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
    அடிநடு முடியிலா ததுஇது மகனே
    படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
    பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
    செடியற உலகினில் அருள்நெறி இதுவே
    செயலுற முயலுக என்றசிற் பரமே
    தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 14. நண்ணிய மதவெறி பலபல அவையே
    நன்றற நின்றன சென்றன சிலவே
    அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
    அலைதரு கின்றனர் அலைவற மகனே
    புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
    பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
    தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 15. அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
    அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
    துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
    சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
    விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
    விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
    தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 16. வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
    மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
    நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
    நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
    ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
    ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
    தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 17. சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
    தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
    வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
    வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
    மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
    மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
    தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 18. அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
    அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
    கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
    காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
    எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
    எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
    சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 19. நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
    நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
    துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
    சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
    என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
    இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
    சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 20. ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
    அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
    ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
    உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
    சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
    சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
    சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 21. கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
    கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
    அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
    அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
    பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
    பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
    தற்பர பரம்பர சிதம்பர நிதியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 22. பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
    பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
    நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
    நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
    சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
    சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
    தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 23. அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
    அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
    செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
    திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
    பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
    பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
    தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 24. கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
    காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
    எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
    இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
    வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
    மாணிக்க மலைநடு மருவிய பரமே
    தருதான முணவெனச் சாற்றிய பதியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
  • 25. ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
    எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
    ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
    ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
    ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
    இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
    சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    • 246. சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
    • 247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.

சற்குருமணி மாலை // சற்குருமணி மாலை

No audios found!